ஈசா நபி (அலை) அவர்களின் மரணமும் 'நஜாத்' ஏட்டின் மூடநம்பிக்கையும் - 2


திருக்குர் ஆனின் பல்வேறு சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் வசனங்கள் ஒன்றை ஒன்று தெளிவுபடுத்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான். விவாதத்துக்குரிய திருமறை வசனமான "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் நஜாத் ஆசிரியரோ முதலில் உயர்த்துதல் நிகழ்ந்துவிட்டது மரணம் பின்னால் நிகழும் என்கிறார். இந்த தலை கீழ் பாடத்தை அறிவுள்ள எவரும் ஏற்க்கமாட்டார். இப்படி திருமறை வசனத்தை புரட்டுவதோடு நின்றுவிடாது அதன் சொற்களுக்கு தவறான அர்த்தமும் நஜாத் ஆசிரியர் தருகிறார். மேற்கண்ட வசனத்திற்கு இவர் தரும் அர்த்தத்தை பாருங்கள். "ஈஸாவே நான் உம்மைக் கைப்பற்றுவேன் இன்னும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன்" என அவ் வசனத்தை இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல இப்போதுள்ள திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பாளர்களும் இவ்வாறே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் உள்ள இமாம்களும் இஸ்லாமிய நல்லறிஞ்சர்களும் நாம் மொழி பெயர்த்துள்ள வண்ணமே மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த திருவசனத்தில் இடம் பெற்றுள்ள 'முதவபீக' என்ற சொல்லுக்கு 'நான் உம்மை மரணிக்க செய்வேன்' என்பதே சரியான பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லுக்கு 'முமீதுக' அதாவது, நான் உம்மை மரணிக்க செய்வேன் என்ற பொருள் தந்துள்ளதாக ஸஹீஹுல் புகாரியில் காணப்படுகிறது. எல்லா அறபி மொழி வல்லுனர்களும் இந்தச் சொல் மேற்கண்ட வசனத்தில் கையாளப்பட்டிருப்பது போல் கையாளப்பட்டிருந்தால் அதன் பொருள் 'மரணிக்கச் செய்தல்' என்பதல்லாமல் அதற்க்கு வேறு எந்த அர்த்தமும்கொள்ளயியலாது என தெளிவு படுத்துயுள்ளனர். எடுத்துக்காட்டாக அல்லாமா அபுல் பகா அவர்கள் தமது 'குல்லிய்யாத்' எனும் அகராதியில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளதை கூறலாம்.

"தவப்பீ' யின் பொருள் மரணிக்கச் செய்வதும் உயிரை வாங்குவதுமாகும். இவ்வினைப் பெயர் 'வபாத்' எனும் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்"

மேலும் 'தவப்பீ' என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருளில்லை என்பதை இமாம் மாலிக் (ரஹ்) , இமாம் புகாரி (ரஹ்) போன்றோர் உறுதி செய்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி - அத்தியாயங்கள் 'தப்ஸீர்' மற்றும் 'பதல் கல்க்' )

திருக்குரானில் இந்த தவப்பா என்ற சொல் இருபத்தைந்து இடங்களில் காணப்படுகிறது. (3"194. 4:16, 7:127, 8:51, 10:47, ஆகியன காண்க) இதில் இருபத்து மூன்று இடங்களில் இச் சொல் மரணத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு இடங்களில் கூட "ரூஹை (உயிரைக்) கைப்பற்றுதல் " என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க இந்தச் சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்றதொரு வினோதமான அர்த்தத்தை இவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றார்கள்?

பதஹுல் பயான் எனும் விரிவுரை நூலில் காணப்படுவது போன்று உண்மையில் இது, ஈஸா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கையை தமது உள்ளத்தில் வளர்த்துக் கொண்ட கிறிஸ்தவ வழி வந்த முல்லாக்கள் உருவாக்கிய அனர்த்தமேயொழிய அந்தச் சொல்லுக்கு இவர்கள் தரும் அர்த்தம் இல்லவேயில்லை!

'ரஃப அ' என்ற சொல்லுக்கு உடலுடன் உயர்த்துதல் என்ற பொருள் உண்டு என்பதற்கோ 'தவஃப்பி' eன்ற சொல்லுக்கு 'உடலைக் கைப்பற்றுதல்' என்ற பொருள் உள்ளது என்பதற்கோ அரபி மொழி இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டையோ அகராதியிலிருந்து ஆதாரத்தையோ தராது வெறும் குதர்க்க வாதங்களால் குட்டையை குழப்புகிறார் நஜாத் ஆசிரியர்.

'ரஃப அ' என்ற அரபிச் சொல் குரானிலும் ஹதீதிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்து பிரயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை " என (பக்கம் 16 இல்) கூறும் அவர், ஈசா (அலை) வர்களைப் பொறுத்தவரை அச் சொல் "உடல் உயர்வு" என்று பொருள் படும் என்று கூறுகிறார். இதை யார்தான் ஏற்க்க முடியும்? ஏனையோரைப் பற்றி ஏன், எம்பெருமானார் (ஸல்) வர்களைப் பற்றி கூட குறிப்பிடப்படும் போது அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தமாம். ஈசா நபியைப் பற்றி வரும் போது மட்டும் அதற்க்கு தனி அர்த்தமாம். இது போன்ற வாதத்தை படிப்பற்றவன் கூட நம்பமாட்டானே !

ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்க வழியில்லாத காரணத்தால் ஈசா நபி அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதற்கு நாம் காட்டிவரும் ஆதாரங்களை நஜாத் ஆசிரியர் மறுக்க முயல்கிறார். முதலில் இவர் தமது நம்பிக்கைக்கு தெளிவான ஆதாரங்களால் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே நம்மால் காட்டப்படும் ஆதாரங்களை மறுக்க முயல வேண்டும். ஆனால் அவரோ ஆதாரம் 2,3 என தலைப்பிட்டு நம்முடைய ஆதாரங்களை தன் மனம் போல் மறுக்கின்றார். இது விவாத முறையன்று.

என்றாலும் இல்லாத சான்றை இவரிடம் கேட்பதில் என்ன பயன்? எனவே இவரின் மறுப்புகளை இனி பார்ப்போம்.

ஈசா நபி (அலை) அவர்களின் இயற்க்கை மரணம் குறித்து திருக்குரானில் காணப்படும் வசனங்களில் ஒன்று இவ்வாறு அமையப்பற்றுள்ளது :-

மர்யமின் மைந்தர் மஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை நிச்சயமாக (அவரைப் போன்ற) தூதர்கள் அவருக்கு முன்னால் காலஞ்சென்று போனார்கள். மேலும் அவருடைய தாயார் ஓர் உண்மைமிக்கப் பெண்ணாவார். அவர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். (இவற்றிலிருந்து) அவர்கள் (ஈசா நபியை இறைவனாகக் கருதுபவர்கள்) எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள் என்பதை காண்பீராக. (5:76)

நஜாத் ஆசிரியர் மறுப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள நூலான "ஈசா நபி (அலை) அவர்களின் மரணம்" என்ற நூலில் இத் திருக்குர்ஆன் வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. :-

இந்த ஆயத்தில் ஈசா நபியின் இறப்பு பற்றி மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை பாருங்கள். இங்கு முதலாவதாக ஈசா நபி ஓர் இறைத்தூதறேயன்றி வேறில்லை என்று கூறியதற்குப் பிறகு அவருக்கு முன் தோன்றிய எல்லா நபி மார்களும் காலஞ்ச சென்று போனார்கள் என்று கூறப்படுகிறது. இது ஈசா நபியின் மரணத்தை உறுதி செய்யும் மறுக்கயியலாத ஒரு சான்றாகும். திருக்குரானின் இந்த நடைக்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். ஸைத் ஒரு மனிதனேயன்றி வேறில்லை. எல்லா மனிதர்களும் மண்ணினால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினால் ஸைத்தும் மண்ணினால் படைக்கப்பட்டவர் என்பதே அதற்குப் பொருள். அது போன்று ஈசா நபியின் மரணம் மேற்கண்ட ஆயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லை என்றால் ஈசா நபியை ஏனைய இறைத் தூதர்களிலிருந்து வேறுபட்டவராக இங்கு காட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் தொடர்ந்து, ஈசா நபியின் தாயார் புனிதவதியாக இருந்தார். எனவும் அவர்களிருவரும் உணவருந்தி கொண்டிருந்தார்கள் எனவும் விளக்குகின்றது.

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஈசா நபி மரணிக்காது உயிருடன் இருக்கிறார் என்பது உண்மையானால் அவரைப் பற்றி அவர் உணவருந்திக்கொண்டிருந்தார் என இறந்த காலத்தில் ஏன் கூறப்பட்டிருக்கிறது? அவ்வாறில்லாமல் அவரையும் அவரது தாயாரையும் இவ் விஷயத்தில் வேறு படுத்தியல்லவா கூற வேண்டும். அதாவது மர்யம் (அலை) அவர்கள் உணவருந்தியிருந்தார்கள் என்றும் ஈசா நபி உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றுமல்லவா கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை. அவர்கள் இருவரும் உணவருந்தியதை கடந்த கால நிகழ்ச்சியாகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தெளிவான விளக்கத்திற்கு நஜாத் ஆசிரியரின் விமர்சனத்தைப் பாருங்கள்.

"காதியானிகளின் இந்த வினோதமான விளக்கத்திற்கு காரணம் ஒன்று அவகளின் விவேகமின்மையாக இருக்கவேண்டும்: அன்றி அறிந்தும் மக்களை மடையர்களாக்கி தங்களின் சுய நலத்தைப் பேணிக்கொள்ளும் வேடமாக இருக்க வேண்டும். ஈசா (அலை) இறந்தது விட்டார்கள் என்றால் அல்லாஹ் அதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி அறிவித்திருக்கலாமே! இப்படி சுற்றி வளைத்துச் சொல்லி காதியானிகளை திண்டாட விட்டிருக்க்வேண்டியதில்லையே!"

நஜாத் ஆசிரியர் இறைவனுக்கே கட்டளையிடுவார் போலிருக்கிறது. யூத இனமான இஸ்ரவேலருக்குத் தூதராக வந்த ஒருவர் இறக்காமல் இருக்கிறார் என இவர் முட்டாள்தனமாக நம்புவாராம். அவ்வாறு இல்லையென்று தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி சுற்றி வளைக்காமல் இறைவன் அறிவிக்க வேண்டுமாம். மனிதானாகப் பிறந்த எவனுக்கும் ஒரு குறுகிய வாழ்விற்குப் பிறகு இறப்பு ஏற்ப்படும் என்பது மடையனுக்கு கூட சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஈசா நபி ஓர் இறைத்தூதர் என்றாலும் அவரும் ஒரு மனிதரே எனவே அவர் இறந்துவிட்டார் எனக் கூறவேண்டிய அவசியமில்லை. நஜாத் ஆசிரியர் பேதமைத்தனமாக நம்புவது போன்று ஈசா நபி உயிருடன் இருந்தால்தான் 'அந்த அற்புதமான விஷயம் பற்றி அல்லாஹ் திருக்குரானிலே தெளிவாக அறிவித்திருக்க வேண்டும்.

நம்மிடம் வந்து ஈசா நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களிடம் நாம் இவ்வாறு கூறுவது வழக்கம். மனிதன் இறப்பதென்பது இயற்க்கை நியதி அதற்க்கு ஆதாரம் காட்டவேண்டியதில்லை. ஆனால் மனிதராகிய ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறக்காது இருக்கிறார் என்று நீங்கள் கூறுவதென்றால் அதுவே வினோதம். அதற்க்கு நீங்கள்தான் ஆதாரம் காட்டவேண்டும்.

எனவே நஜாத் ஆசிரியரிடம் கேட்போம் ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத சுற்றிவளைக்காத தெளிவான ஆதாரத்தைத் தாருங்கள். இவ்வாறு அவரைக் கேட்க நஜாத் ஏட்டின் ஒவ்வொரு வாசகரும் கடமைப் பட்டவராவார்.

ஏனெனில், ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்ற கொள்கை தவ்ஹீதிற்கு எதிரானது. எவ்வாறெனில் மேற்கண்ட இறைவசனத்திலும் இன்னும் பல வசனங்களிலும் இறைவன் தனக்கு இணையாக வணங்கப்படுபவர்கள் எல்லாம் மரணித்துப் போனவர்கள் என்பதை விளக்கி தனது "தவ்ஹீத்" நிலையை எடுத்துக் காட்டுகின்றான். மேற்கண்ட வசனத்தில் இறைவன் ஈசா நபியை ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதராக - உணவு உண்டு வாழ்ந்த ஒருவராக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றான். மேலும் அவர்ட் சாதாரண மனிதரைப் போன்று "உணவருந்திக் கொண்டிருந்தார்"என்று கூறி அவர் இறந்து போனார் என்பதை மீண்டும் உறுதி செய்து அவர் கடவுள் இல்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கின்றான்.

திருக்குரானில் இறைவன் இவ்வாறும் அறிவித்துள்ளான் :-

அல்லாஹ்வைத் தவிர்த்து யாரை அவர்கள் (இணைவைப்பவர்கள்) அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் படைக்கவில்லை ஆனால் அவர்கள் தாம் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணித்துப் போனவர்கள்: உயிருள்ளவர்கள் அல்ல மேலும் அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். (16:21,22)

இந்த வசனத்தில் இறைவன் தனது ஏகத்துவ நிலைக்குச் சான்றாக கடவுளாக அழைக்கப்படுகின்றவர்களின் மரணத்தையே கூறுகின்றான். இன்று பெரும் பான்மை மக்களால் கடவுளாக அழைக்கப்படுகின்றவர் ஈசா நபி ஆவார், அப்படி அழைக்கப்படுகின்றவர், மரணித்துப் போனவர் என்றும் மரமண்டைகளில் ஏறும் வண்ணம் உயிருள்ளவர்கள் அல்ல என்றும் இறைவன் கூறுகின்றான். ஆனால் நஜாத் ஆசிரியரைப் போன்றவர்கள், இல்லை இல்லை ஈசா நபி உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறி இறைவனின் இந்த வார்த்தைகளை மறுக்கின்றனர். இது தவ்ஹீதிற்கு இறைவன் தரும் சான்றை மறுப்பது மட்டுமல்ல தவ்ஹீதையே மறுப்பதாகும். எனவே ஈசா நபி உயிருடன் இருக்கிறான் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற ஒன்றாகும். ஈசா நபி பிரச்சனை அவசியமற்றது என்று கூறுபவர்கள் இதனை எண்ணிப்பார்க்கவேண்டும். நஜாத் ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் முடிவு காண நஜாத் ஆசிரியரை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் தம்மை தவ்ஹீது வாதிகள் என்று வாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இவ்வாறு வரைகிறார்:- "இந்த இறை வசனம் மூலம் ஈசா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூய உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவர்களா? மரணமற்றவர்களாயின் அல்லாஹ்விற்கு இணையாகுமே என காதியானிகள் கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம்." இவ்வினாவிற்கு விளக்கமாகவே, "ஈசா (அலை) அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு மரணமில்லை என்று எண்ணுகிறீர்களா? மற்ற நபிமார்கள் இறந்ததுபோல் ஈசா(அலை) அவர்களும் மரணிப்பவர்களே."

நாம் தந்துள்ள தெளிவான சான்றை இவர் எப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து மறுக்கிறார் பாருங்கள். ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என ஆரம்பகால முஸ்லிம்கள் நம்பியிருந்தால்தானே அவர் மரணித்துப் போவாரா மாட்டாரா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்க முடியும்? எனவே ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்ற நம்பிக்கை ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருந்தது என்பதற்கு முதலில் இவர் ஆதாரம் காட்ட வேண்டும் அதன் பிறகே இதுபோன்று வாதிக்கவேண்டும்.

மேற்கண்டவாறு கூறுவதன் மூலம் ஆம் திருவசனம் ஈசா நபியின் மரணம் பற்றியது என்பதை நஜாத் ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று நாம் கூறுகின்றோம் அவரோ இன்மேல் தான் நிகழும் என்கிறார். இந்த கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆன் என்ன தீர்ப்பளிக்கிறது பார்ப்போம்.

முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் (3:145)

ஈசா நபி நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஒரு நபி, அத்தகு நபிமார்கலேல்லாம் காலஞ்சென்று போனார்கள் என தெளிவுபடுத்துகிறது இந்தத் திருவசனம். இந்த வசனத்தைப் படித்த, அறிவுள்ள எவரும் ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நஜாத் ஆசிரியரைப் போன்ற குழப்பவாதிகளோ திருக்குர்ஆன் ஆயத்தை திரித்துக் கூறி மக்களை ஏமாற்றவே செய்வர். ....."தூதர்கள் காலஞ்சென்று போனார்கள்." என்று இருப்பதை "தூதர்கள் பலர் சென்று போனார்கள்" என்று இல்லாததை இட்டுக் கட்டி நஜாத் ஆசிரியர் (பக்கம் 24 இல்) கூறுகிறார். இந்த ஆயத்தில் 'பலர்' என்று பொருள்படும் பஃள என்ற சொல் இல்லவே இல்லை. இதிலிருந்து யார் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்பதை வாசகர்கள் தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஈசா நபி அவர்கள் இறந்து போனது சந்தேகத்திற்க்கிடமின்றி தெளிவாகியிருக்கையில் அதனை ஏற்காது, இந்த 3:144 வசனம் இறங்கும் போது நபிபெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருந்தது போலவே 5:75 வசனம் இறங்கும் போது ஈசா நபி உயிரோடு இருந்தார் என்ற ஒரு அபத்தமான ஒரு வாதத்தை நஜாத் ஆசிரியர் எடுத்து வைக்கிறார். ஈசா நபிக்கு முன்னால் உள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனத்தை படித்த பிறகும் ஈசா நபி இறந்தார்களா என்ற சந்தேகம் எழுமானால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனம் அந்தச் சந்தேகத்தை அடியோடு போக்கிவிடுகிறது.

இது குறித்து அல்லாஹ் மீண்டும் தெளிவு படுத்தியிருப்பதை பாருங்கள்.

மனிதர்களேயன்றி வேறெவரையும் நாம் உமக்கு முன்னர் (தூதர்களாக) அனுப்ப வில்லை, அவர்களுக்கே வஹீ அனுப்பியிருந்தோம் .......... ......... மேலும் உணவருந்தாததும் நிலைத்து வாழக்கூடியதுமான உடலை நாம் அவர்களுக்கு தரவில்லை. (21:8,9)

இதிலிருந்து ஈசா நபி உணவருந்தாது ஒரு நீண்ட காலம் உயிர் வாழ்கிறார் என்ற நஜாத் ஆசிரியரின் வாதம் முழுக்க முழுக்க தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தையும் இதற்க்கு முன்னால் குறிப்பிட்டுள்ள இரண்டு வசனங்களையும் படித்தறிந்த பிறகும் ஒருவர் ஈசா நபி மரணிக்கவில்லைஎன வாதிப்பாரேயானால் அவர் ஈசா நபியை இறைதூதர் என்ற நிலைக்குமேல் உயர்த்துகிறார் என்பதே அதற்குப் பொருள். அவ்வாறு செய்கின்றவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுப்பவரும் அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை அவமதிப்பவருமேயாவார். அத்தகைய ஒருவராகவே நஜாத் ஆசிரியர் காணப்படுகிறார்.

"உமக்கு முன்னர் நாம் எந்த மனிதருக்கும் நீண்ட கால வாழ்வு அளிக்கவில்லை. (முஹம்மது நபியே) நீர் மரணித்து இவர்கள் நெடுங்காலம் வாழ்வதா?" (21:25)

என இறைவன் கேட்கிறான். ஆனால் நஜாத் ஆசிரியரோ மானமும், வெட்கமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மரணித்திருக்க ஈசா நபி இன்னும் உயிரோடு இருப்பதாக வாதிடுகிறார். இப்படி வாதிடுபவர்கள் ஒரு வேளை கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக இருக்கவேண்டும்.

நாம் இதனை மிகைப்படுத்திக் கூறவில்லை. நமக்கு எழுந்துள்ள சந்தேகம் நியாயமானதுதான். நஜாத் ஆசிரியர் இது குறித்து எழுதியிருப்பதை நீங்கள் படித்தல் உங்களுக்கும் அந்த சந்தேகம் எழும். அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"தூதர்களில் சிலரைச் சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறோம்." என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்றெல்லா நபி மார்களையும் விட எல்லா விஷயங்களிலும் உயர்த்தியிருப்பதாகச் சொல்லவில்லை. "

இதிலிருந்து நஜாத் ஆசிரியரின் ஈமானில் கோளாறு உள்ளதை உணரலாம். அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் விட எல்லாவகையிலும் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல அந்த மானபியை முழுமையாகப் பின்பற்றிய மக்கள் எல்லா மக்களையும் விட உயர்ந்தவர்கள் என்பதையும் திருக்குர்ஆன் தெளிவு படுத்தியிருக்கிறது. கீழ்வருவன அதற்க்கு சான்றுகளாகும்.

காத்தமுன் முன்னபிய்யீன் - எல்லா நபிமார்களையும் விடச் சிறந்தவர்கள்- (சூரா அஹ்சாப்)

யாசீன் - தலைவரே -(சூரா யாசீன்)

புகழக்கூடிய இடத்துக்கு உரியவர் (மக்காமே மஹ்மூத்) - (சூரா பனி இஸ்ராயீல்)

உலக முழுவதிற்கும் ஒரு அருட்கொடை (சூரா அன்பியா)

உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட ஒரே இறைத்தூதர். (சூரா அக்ராப்)

இவ்வாறெல்லாம் நபி(ஸல்) அவர்களை மேன்மைப் படுத்திக் கூறியுள்ளபோது இந்த மேதாவி அதிலும் சந்தேகத்தைக் கிளப்புகிறார். இவர்கள் தான் மக்களை ஆலிம்களாக்குகிறவர்களா?

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். மேலும் உனது உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை அறிகின்ற்றவன் நீ ஒருவனே. 

“எனது இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என எனக்குக் கூற நீ கட்டளையிட்டதையல்லாமல் வேறெதனையும் நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களோடு இருந்தவரை அவர்களுக்கு நான் ஒரு சாட்சியாவேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய். மேலும் நீயே அனைத்தையும் கவனிப்பவனாவாய்! (5:117,118) 

‘ஒட்டக் கூத்தருக்கு இரட்டைத் தாழ்பாள் என்று கூறப்படுவது போன்று இந்த வசனம் நஜாத் ஆசிரியரின் இரண்டு கூற்றுகளையும் அடியோடு தகர்த்து விடுகிறது. இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதையும் அவர்கள் திரும்ப வரபோவதில்லை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கிவிடுகின்றது. “நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொற்றொடர், ஈஸா நபியின் சமுதாயம் இறைவனுக்கு இணைவைப்பதற்கு முன்பே அதாவது ஈஸா நபியையும் அவர்களுடைய தாயாரையும் இரு தெய்வங்களாக எடுத்துக் கொளவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே ஈஸா நபியின் சமுதாயம் இணை வைத்தலில் இறங்கிவிட்டது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. எனவே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் மரணித்துப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். 

அடுத்து ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற கருத்தும் மிகத் தவறானது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து புலனாகிறது. அவர்கள் அவ்வாறு வருவதாயிருந்தால் அவர்களுடைய சமுதாயம் இறைவனுக்கு இணை வைப்பதையும், அவர்களையும் அவர்களுடைய தாயாரையும் கத்தோலிக்கர்களும் மற்றவர்களும் வணங்கிவருவதையும் அவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அவர்களால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று இறைவனிடம் எவ்வாறு கூறமுடியும்? மேற்கண்ட இறைவசனத்திலோ அவர்கள் அந்தச் சமுதாயத்தினரோடு இருந்தவரை அவர்கள் இணைவைத்தலில் ஈடுபடவில்லை என்று கூறுவதாக வருகிறது. எனவே, ஈஸா நபியின் சமுதாயம் இணைவைத்தலில் ஈடுபடுவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துபோனார்கள் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதை உணரலாம். 

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள் என எப்படியாவது எடுத்துக் காட்டவேண்டும் எண்ணமுள்ளவர்கள் இந்தத் திருமறை வசனத்திலுள்ள ‘பலம்மா தவபைத்தனி’ என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்த பின் எனப் பொருள் தருவதற்குப் பகரமாக வெகு தந்திரமாக, நீ என்னை (உடலுடன்) கைப்பற்றியபின்’ என்று பொருள் கூறுவார்கள். இந்த தவப்பி என்ற சொல்லுக்கு மரணிக்க செய்தல் அல்லது ரூஹை அதாவது உயிரைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். 

இது தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

உலகில் அரபு நாடு உருவாகி அங்கு அரபி மொழி வழக்கில் வந்த நாள் முதல் இதுவரை வந்த எந்த உரையிலிருந்து அது புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் ‘தவப்பி’ என்ற சொல்லுக்கு உடலைக் கவர்தல் என்ற பொருள் தரப்பட்டிருந்த ஓர் உதாரணத்தை யாராலும் காட்டமுடியாது. மாறாக, தவப்பி என்பது இறைவன் மனிதனுக்கு இழைக்கின்ற செயலாக கூறப்பட்ட இடங்களிலெல்லாம் அதற்கு மரணிக்கச் செய்தல் உயிரைக் கவர்கள் என்ற அர்த்தங்களே தரப்படுகின்றன. உடலைக் கவர்தல் என்ற அர்த்தம் எங்கும் காணப்படவில்லை. எந்த அகராதியிலும் நாம் தரும் அர்த்தத்திற்கு மாற்றமான அர்த்தம் தரப்படவில்லை. 

எவராவது, திருக்குரானிலிருந்தோ அல்லது நபி மொழிகளிலிருந்தோ அல்லது அரபி மொழிக் கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தோ மேற்கண்ட சொல்லுக்கு மரணிக்கச் செய்தல், உயிரைக் கவர்தல் என்பதைத் தவிர வேறு பொருள் உண்டு என்பதற்கு உதாரணம் காட்டினால் அவருக்கு எனது சொத்தில் ஒரு பகுதியை விற்று ஆயிரம் ரூபாய் தருவேன் என இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். (இஸாலே ஔஹாம் – பக்கம் 603) 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த சவாலை அவர்களின் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாரும் ஏற்கவில்லை. இதிலிருந்து இந்த ஆலிம்சாக்கள் உண்மையை மறைத்து இட்டுக்கட்டிப் பொருள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்த “பலம்மா தவபைத்தனி’ – நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொல்லை அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் நாம் கூறும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் மேற்கண்ட ஆயத்தைக் குறிப்பிட்டே கூறியுள்ளார்கள். புஹாரி ஷரீபில் இவ்வாறு காணப்படுகிறது:-

இறுதி நாளில் நான் (நபி பெருமானார் (ஸல்) அவர்கள்) ஹவ்ல் கவ்ஸரில் நிற்கும்போது சிலர் என் முன் காணப்படுவார்கள் அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களைப் பார்த்து நான் உஸைஹாபி, உஸைஹாபி (இவர்கள் என் தோழர்கள்) என்று உரத்த குரலில் கூறுவேன். அப்போது, இவர்கள் உங்களுடைய காலத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் இஸ்லாத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்படும். அதற்கு நான் இறைவனின் அந்த நல்லடியாரான ஈஸா நபி கூறியிருந்ததைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன், ஆனால் (பலம்மா தவப்பைத்தனி) நீ என்னை மரணிக்கச் செய்தபின் நீயே அவர்களைக் கண்காணிக்கின்றவனாக இருந்தாய் என்று கூறுவேன். (புஹாரி, கிதாபுத் தப்ஸீர்) 

“பலம்மா தவபைத்தனி” என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்தபின் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை. இதை நபி பெருமானார் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதனைப் படித்தப்பிறகும் ஒருவர் அந்த சொற்றொடருக்கு வேறு அர்த்தம் இருப்பதாகக் கூறுவாரேயானால் அவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தை மறுக்கின்றவர் ஆகிறார். எனவே அவருடன் தொடர்ந்து விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

இப்படி, பல்வேறு கோணங்களில் ஈஸா நபியின் மரணம் திருக்குரானால் உறுதி செய்யப்படுகிறது. இந் நிலையில் ‘நஜாத்’ ஆசிரியரைப் போன்றவர்களுக்கு குட்டையைக் குழப்புவதை தவிர வேறு வழியில்லை! ஈஸா நபி உயிருடன் உள்ளார் எனபதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருவதற்குப் பகரமாக அர்த்தமற்ற சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் வாசகர்களைத் திசை திருப்பவே அவர் முயன்றிருக்கிறார். “ஹஸரத் ஈஸா நபி (அலை) சிலுவைச் சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன? நபி கோழையாவார்களா? என்று அவர் கேட்கிறார். 

திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றினை படித்திருந்தால் அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையாவது படித்திருந்தால் அதுபோன்ற அபத்தமான கேள்வியை நஜாத் ஆசிரியர் கேட்டிருக்கவேமாட்டார். பொதுவாக சொந்த நாட்டை துறந்து வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்வது நபிமார்களின் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. எதிரிகள், அவர்களின் அநியாயச் செயல்களில் எல்லை மீறிப் போகும்போது அல்லது நபிமார்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்போது அந்த நபிமார்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இது அறிவுடமையே தவிர கோழைத்தனம் அன்று ஏனெனில் அந்த நபிமார்கள் உயிர்வாழ்ந்திருந்தால் தான் இறைவன் அவர்கள் மீது சுமத்திய பொறுப்புகளை நிறைவேற்றிடமுடியும். 

இந்தப் பொது விதிக்கு நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூட உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். மக்காவின் ‘காபிர்’கள் நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்துவிட திட்டமிட்டு அவர்களுடைய வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்கள் இரவோடிரவாக மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யவில்லையா? 

நஜாத் ஆசிரியரைக் கேட்க்கிறோம், இஸ்ரவேலர்களுக்கு இறை தூதராக வந்த ஈஸா நபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்றியதாகக் கூறுகின்றீர்களே. அதே நிலை, அகில உலகிற்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டபோது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்தவில்லையே ஏன்? ஈஸா நபியை நேசித்த அளவுக்கு இறைவன் நபி பெருமானாரை நேசிக்கவில்லையா? அல்லது கிருஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா நபி (நவூதுபில்லாஹ்) இறைவனின் நேச குமாரன் என்பதுவும் உங்களின் எண்ணமா? 

ஏனைய நபிமார்களுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அவர்களை இந்த பூமியிலேயே காப்பாற்றிய இறைவன் ஈஸா நபியை மட்டும் வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? வானத்திற்கு உயர்த்த இறைவனுக்கு வல்லமையில்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறோம், ஏன், பூமியிலேயே அவர்களைக் காப்பாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு இல்லையா? தவ்ர் குகையில் மறைந்திருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்களையும் ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களையும் ஓர் அற்பப் பிராணியான சிலந்தியைக் கொண்டு எதிரிகளிடம் பிடிபடாது இறைவன் காப்பாற்றினான். இத்தகைய வல்லமை மிகுந்த இறைவன் ஈஸா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவன் வகுத்துள்ள நியதிகளை தவிடு பொடியாக்கி வானத்திற்கு உயர்த்தியிருப்பானா? நிச்சயமாக அவன் அவ்வாறு செய்யவில்லை! மாறாக, ஏனைய நபிமார்களைப் போல் ஈஸா நபியையும் இப்பூமியிலே காப்பாற்றினான். இது குறித்து இறைவனே கூறுவதைப் பாருங்கள்:- 

“மேலும் நாம் மரியமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். நீரூற்றுகளுள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்” (23:51) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஈஸா(அலை) அவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்ட இடம் பற்றி, 

ரப்வ – மலைப் பிரதேசம் 

மயீன் – நீரருவி நீரூற்று நிரம்பிய இடம். 

தாது ‘கரார்’ – மக்கள் வசிக்குமிடம் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இந்த வர்ணனைகள் காஷ்மீருக்குப் பொருந்துமா? வானத்திற்கு பொருந்துமா? 

அடுத்து, ஈஸா நபி (அலை) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ சென்றதாக அதாவது தமது சொந்த நாட்டைத் துறந்து சென்றதாக நபிபெருமானார் (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள். 

அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா நபி அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான், “ஈஸாவே நீர் மற்றவர்களால் அறிந்து கொள்ளப்படாமலும் துன்புருத்துதளுக்கு இலக்காகாமலும் இருக்க இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ‘ஹிஜ்ரத்’ செய்வீராக” (கன்ஸுல் உம்மால்) 

இவற்றிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு தமது நாட்டைத் துறந்து சென்றார்கள் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டும். 

ஈஸா நபி (அலை) அவர்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் பரவலாக வசித்துவந்த இஸ்ரவேல் இன மக்களுக்கு இறைத்தூதை எட்டவைத்து, இறுதியாக காஷ்மீர் வந்தடைந்தார்கள், அங்கெ தமது 120 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள் என்பதையெல்லாம் இறையறிவிப்பின் அடிப்படையிலும் ஹஸரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது மஸீஹ் ஹிந்துஸ்தான் மேய்ன் (தமிழில் இந்தியாவில் இயேசு) என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, ஈஸா (அலை) அவர்கள் இந்தியா வந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன என முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மற்றும் நல்லரிஞர்களும்கூட கூறியுள்ளார்கள். 

இவற்றை மறுக்க இயலாத நிலையில் நஜாத் ஆசிரியர், சிலுவையில் அடிக்கப்பட்டவர் வேறொருவர். அவரே “காஷ்மீருக்கும் ஓடிப் போயிருக்கலாம். பின்னர் மாண்டிருக்கலாம். அவர்களின் கல்லறை காஷ்மீரில் இருப்பதாக எழுதியிருக்கலாம்” என்று வரைந்துள்ளார். இவற்றிலிருந்து இந்தச் சம்பவங்களலெல்லாம் உண்மை, ஆனால் ஆள்தான் வேறு என நஜாத் ஆசிரியர் கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். அதாவது ஈஸா நபியை கொல்ல முயற்சித்த யூதர்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் பல்வேறு இனங்களைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் நல்லரிஞர்களும் கூட ஏமாந்து போனார்கள் தாம் மட்டும்தான் அது உண்மையான ஈஸா அல்ல அது வேறொரு நபர் என்று கண்டு பிடித்துள்ளதாக நஜாத் ஆசிரியர் கூற விழைகிறார். அப்படியானால் அதற்க்கான ஆதாரத்தை தரட்டும்! ஓர் “அற்புதகரமான ஆராய்ச்சியாளரை” உலகம் கண்டுகொள்ளட்டும். 

ஆனால் இறைவசனங்களுக்கெதிராக, நபிமொழிக்கெதிராக யாராலும் எந்த சான்றையும் காட்ட இயலாது! ஏனெனில் அது உண்மையே உருவானவை. “உண்மைக்கு எதிராக யூகங்கள் எந்தப் பயனும் அளிக்காது” (10:37) என்பதற்கேற்ப உண்மையின் முன்னால் எந்தப் பொய்யும், யூகமும், கற்பனையும் நிற்கயியலாது.

தவப்பா என்ற சொல்லுக்குத் பி.ஜே யின் தவறான விளக்கம்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 93 இல் கைப்பற்றி உயர்த்துதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குரானில் 3:55 வசனத்தில் முதவப்பீக என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கைப்பற்றுதல் என்றும் மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. இதில் எது சரி என்பது பற்றி முழுமையான விபரம் 151 வது குறிப்பில் காண்க.

நம் விளக்கம்:

I 93 மற்றும் 151 ஆகிய இரு குறிப்புகளையும் காண்போம். அவற்றில் தவபைத்தனி எனும் சொல்லைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது. இச் சொல் திருக்குரானில் 25 இடங்களில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ரூஹை கைப்பற்றுதல் என்று தான் பொருளே தவிர கைப்பற்றுதல் என்று பொருள் இல்லை 3:55 இவ்வாறே வசனமும் பொருள் தரும்.

உதாரணமாக திருக்குர்ஆன் 39:42 வது வசனத்தில், உயிர்களை மரணத்தின்போதும், மரணிக்காதவற்றை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று வருகிறது. 1) 39:42 2) 6:60 ஆகிய இரு வசனங்களுக்கு பி.ஜே கூறுவது போல், இரவில் காப்பாற்றுகிறான். தூக்கத்தில் கைப்பற்றுகிறான் என்று பொருள் இல்லை. தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுகிறான் என்றே பொருள் 3) எதன் மீது அல்லாஹ் மரணத்தை விதித்து விட்டானோ அந்த உயிர் அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ளது. 4) தூக்கத்தின் போது கைப்பற்றபட்ட உயிரை, குறிப்பிட்ட காலம் வரை வாழ விட்டு விடுகிறான்.

இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் தவப்பி எனும் சொல் வரும் 25 இடங்களில், மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 23 இடங்களிலும், தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 2 இடங்களிலும் வருகிறது. இதில் கைப்பற்றுகிறான் என்றுதான் வருகிறது. மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை என்று பி.ஜே எழுதியுள்ளார். இது தவறாகும்.

1) எதை கைப்பற்றுகிறான்? உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்றுதான் வருகிறதே தவிர, கைப்பற்றுகிறான் என்று மட்டும் வரவில்லை.

2) உயிர்களைக் கைப்பற்றுதல் என்பது மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் ஆகிய இரு இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. மூன்றாவது இடம் இல்லை.

பி.ஜே தவப்பா என்ற சொல்லுக்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்ற எனக் கூறியிருப்பதும் தவறாகும்.

மரணத்தின் மூலம் நிரந்தரமாகவும் தூக்கத்தில் கைப்பற்றப்படுவதின் மூலம் தற்காலிகமாகவும் ஒரு மனிதனின் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவ்வளவுதான்.

திருக்குர்ஆன் வசனத்திற்கு அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள். அதாவது மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனதிற்குப் பொருள் கொள்ள முடியாது என்று பி.ஜே எழுதியுள்ளார்.
அவர்களை மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள் என்று பொருள் கொடுக்க வேண்டும்.

II. திருக்குரானில் 2:281; 3:161; 3:185; 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக கூலி தரப்படும் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது என்று பி.ஜே எழுதுகிறார்.

இந்த வசனங்களில் தவப்பா எனும் சொல் வந்தாலும் மறுமை எனும் சொல்லும், செயல் எனும் சொல்லும், கூலி எனும் சொல்லும் வருவதால் ஒருவரின் செயலுக்குரிய கூலி மறுமையில் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று பொருள் கொள்ளவேண்டும். இடத்திற்கேற்ப பொருள் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு தனக்கு கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர். எனக்காக நீங்கள் துஆ செய்யுங்கள் என்று வேண்டினால், அறிவுள்ளவன் எவனும் கேன்ஸர் என்பதை நோய் என்று பொருள் கொள்வானே தவிர, கேன்ஸர் என்றால் கடகராசி என்றும், அதன் வல்லுநர்களான ஜோதிட விற்பன்னர்கள் கடகராசியின் தீங்கிலிருந்து காப்பாற்றி விடலாம் என்று கூறுகிறார்கள். அதற்க்கா துஆ செய்வோம் என்று எண்ணமாட்டான். மரணம் என்பது இம்மையில் நடக்கக்கூடியது. ஒருவரின் செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாக கிடைக்கக் கூடியது. அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் பகைவனாக விளங்கக் கூடிய ஒருவனுக்கு இம்மையில் ஒரு கூலி கிடைக்கும். ஆனால் அவனுக்குரிய முழுமையான கூலி மறுமையில்தான் கிடைக்கும். எனவே இவ்விரண்டின் பொருளையும் பி.ஜே தன் சிந்தனையில் வைத்து சரியான பொருளை மக்களுக்கு கூற வேண்டும்.

III. என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார். (திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடன் ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:149) என்ற வசனத்துடன் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது என்று பி.ஜே எழுதியுள்ளார்.

நம் விளக்கம்:

1) தவப்பி எனும் சொல் ரூஹைக் கைப்பற்றுதல் அதாவது மரணம் என்றால், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றால், திருக்குர்ஆன் 43:61 ; 4:149 ஆகிய வசனத்தின்படி அவர் உயிருடன் உள்ளார் என்று தெரிகிறதே! என்று பி.ஜே கருதுகிறார். ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளின்படி ஈஸா(அலை) மரணித்து விட்டார் என்றால், அவ்விரு வசனங்களுக்கும் பி.ஜே தவறான பொருளைத் தந்து தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறார். அல்லாஹ்வின் வசனத்துடன் விளையாடுகிறார் அதனை விரிவாகக் காண்போம்.

தவப்பா எனும் சொல் வரும் 25 இடங்களில், இரவிலோ, தூக்கத்திலோ ரூஹ் கைப்பற்றப்படுவதற்கு தூக்கம் என்ற தற்காலிக மரணம் என்னும் பொருளில் இரு இடங்களில் வருகிறது (6:61; 39:43) ஏனைய 23 இடங்களில், இரு இடங்களில் ஈஸா நபியுடனும் – 3:55; 5:116-118, ஓரிடத்தில் யூசுப் நபியுடனும் – 12:102 , மூன்று இடங்களில் நபி (ஸல்) அவர்களுடனும் வருகிறது. நபிமார்களுடன் ஆறு இடங்களில் ஏனைய பதினேழு இடங்களில் மனிதர்களுடனும் வருகிறது.

ஈஸா நபியுடன் வருகிற 2 இடங்கள் நீங்கலாக ஏனையவர்களுடன் (4+17 ) 21 இடங்களில் வருகிறது. அந்த 21 இடங்களிலும் உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளில்தான் வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஈஸா நபியுடன் வரும் 2 இடங்களுக்கு மட்டும் கைப்பற்றுதல் எனும் பொருள் தந்து உடலோடு கைப்பற்றப்பட்டார். என்று வாதிக்கின்றனர். எனவே 21 இடங்களில் மரணத்தின் போது உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளில் வருவதைப் போலவே ஈஸா நபியுடன் வரும் இரண்டு இடங்களிலும் மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் என்பதே பொருளாகும்.

2) திருக்குர்ஆன் 39:42 வசனத்தில், தவப்பா எனும் சொல்லுக்கு உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளைத் தான் அல்லாஹ் தந்துள்ளான். 1) மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 2) தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் மூன்றவதாக கைப்பற்றப்படுவத்தாக்கு எதையும் அல்லாஹ் கூறவில்லை. எனவே ஈஸா நபி மரணித்திருக்க வேண்டும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கவேண்டும். ஈஸா நபியுடன் 2 இடத்திலும் இரவு என்றோ, தூக்கம் என்றோ கூறப்படாததினால் அவரது ரூஹ், மரணத்தின்போது கைப்பற்றப்பட்டு விட்டது என்பதே பொருளாகும்.

3. திருக்குர்ஆன் வசனத்தில், 39:42 அல்லாஹ் உயிர்களைத்தான் கைப்பற்றுவதாக கூறுகிறான். உடல் என்று அதில் கூறவில்லை. மேலும் மரணத்தின் போது கைப்பற்றிய உயிரைத் தன்வசம் வைத்திருப்பதாகவும் தூக்கத்தின் போது கைப்பற்றிய உயிரை உயிர் வாழ்வதற்கு சில காலம் விட்டு விடுவதாகவ்ம் கூறுகிறான். எது கைப்பற்றப்பட்டதோ, அதுதான் இறைவன் அளவில் உயர்த்தப்பட்டு அவன்வசம் இருக்கும், ஈஸா நபியின் உய்ரிதான் கைப்பற்றப்பட்டது. எனவே அவரது உடல் உயர்த்தப்பட்டது. என்பது முற்றிலும் தவறாகும்.

4) ஈஸா நபியுடன் வரும் 2 இடங்களில், ஓரிடத்திற்கு அதாவது 5:116-118 வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் தன்னோடு ஒப்பிட்டுக் காட்டி, தன்னுடைய உயிர் கைப்பற்றப்பட்டபிறகு தன் தோழர்களுள் சிலர் வழிகேட்டில் சென்று நரகிற்கு இழுத்துச் செல்லப்படுவதைக் கூறுகிறார்கள். இதுபோல் அவ்வசனத்திற்கு ஈஸா நபியின் உயிரும் கைப்பற்றப்பட்ட பிறகே, அவரது சமுதாயம் அவரையும் அவரது தாயையும் இரு தெய்வங்களாக ஆக்கிக் கொண்டனர். என்று நபி (ஸல்) அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். (புகாரி 4625)

இரண்டாவது வசனமாகிய வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், அதில் வரும் முதவப்பீக்க எனும் சொல்லுக்கு முமீத்துக்க (மரணம்) என்று பொருள் தந்துள்ளார்கள். (புகாரி 4623 க்கும் 4625 க்கும் இடையில் காண்க)
எனவே ஈஸா நபி, முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போன்றும், யூசுப் நபியைப் போன்றும், 17 இடங்களில் வரும் மனிதர்களைப் போன்றும் மவ்த் ஆகி விட்டார் என்பது தெளிவு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். திருக்குரானில் 17+4=21 இடங்களில் ஈஸா நபியின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

5) நபி மொழிகளில் பல்லாயிரம் இடங்களில் தவப்பா எனும் சொல் மூலம் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, அல்லாஹ் தவப்பா செய்தான் என்று வந்து, அதில் இரவு, உறக்கம் எனும் சொற்கள் வரவில்லை என்றால் அல்லா அவரது உயிரைக் கைப்பற்றி விட்டான் என்று பொருள் இவ்வாறு தவப்பா எண்டும் சொல் நபிமொழிகளில் பலருடன் பல்லாயிரம் முறை வந்துள்ளது. இப்படி வந்தால் அதற்கு ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லவே இல்லை. இருந்தால் ஒரே ஒரு சான்றைக் கொண்டு வாருங்கள். போகட்டும்! அரபி இலக்கியங்களிலிருந்தாவது ஒரே ஒரு சான்றைக் கொண்டு வர முடியுமா? ஆக 21+ பல்லாயிரம் தடவைகள் தவப்பா எண்டும் சொல் ஈஸா நபியின் மரணத்தை உறுதி செய்கிறது. திட்டவட்டமான பொருளைத் தராத 43:61; 4:159 ஆகிய வசனங்களைக் காட்டி, ஈஸா நபி இறந்து விட்டார் என்றால் அவ்விரு வசனத்துடன் மோதுகிறது என்று திசை திருப்பும் பி.ஜே தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ரூஹைக் கைப்பற்றுதல் என்று பொருளைத் தரும் தவப்பி எனும் சொல்லுடன் ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பது பல்லாயிரம் தடவை மோதுவதை சிந்திக்க வேண்டும்.

பி.ஜே கூறுகிறார்:

நான் அவர்களுடன் இருக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன் என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.

நான் உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் நான் அவர்களுடன் இருந்த போது என்று ஈஸா நபி கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நாம் உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு பலம்மா தவபைத்தனி என்று அவர்களில் கூறினால், அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்றுதான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நான் அவர்களுடன் இருந்த போது என்ற முற்றிலும் வித்தியாசமாக வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள். உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பதுதான் இதன் கருத்தாகும்.

நம் பதில்:

1) நபி மொழிகளில் திருக்குரானுக்கு விளக்கமாகும் என்பது 5:116-118 வசனத்திற்கு பொருந்துகிறது. வசனத்திற்கு பி.ஜே தந்த அதி அற்புதமான விளக்கத்தைக் காண்போம். நபி (ஸல்) அவர்கள் நான் இறைவனின் நல்லடியாரான அந்த ஈஸா நபி (அலை) அவர்கள் கூறியதைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்குச் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பின் நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று கூறுவேன் என்று கூறியதாக புகாரியில் காணப்படுகிறது. பி.ஜே சொல்வது போல் என்றால். நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் (நபித்தோழர்களுடன்) இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள், உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்று பி.ஜே நம்பத் தயாரா? அதாவது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நபித்தோழர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைந்துள்ளார்கள் என்று நம்புகிறாரா?
நீங்கள் எத்தனை ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த அநீதியை, அவமானத்தை, களங்கத்தை செய்யப் போகிறீர்கள்?

2) நான் அவர்களுடன் இருந்த போது என்றுதான் பொருளே தவிர, நான் உயிர் இல்லாமல் அவர்களுடன் இருந்த போது என்று பொருள் இல்லை. எனவே, நான் அவர்களுடன் இருந்த போது நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என் ரூஹை கைப்பற்றிய பிறகு நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய் என்று பொருள் கூறி இருப்பதுதான் முற்றிலும் சரியாகும். ஏனென்றால் உயிருடன் இருப்பவர் மட்டுமே சாட்சியாக இருக்க முடியும்.

அவர் மரணமடைந்ததினால் தான் மீண்டும் பூமிக்கு வருவது பற்றியோ அவரது சாட்சி பற்றியோ திருக்குர்ஆன் எதுவும் கூறவில்லை.

3) ஈஸா நபி, நான் அவர்களுடன் இருந்த போது என்றுதான் கூறியுள்ளார். நான் உயிருடன் இருந்த போது என்று கூறவில்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும் என்று பி.ஜே சிந்தித்ததினால் சிந்திய முத்துகளை மேலே கண்டோம். நான் அவர்களுடன் இருந்தபோது கண்காணித்தவனாக இருந்தேன் என்றால், நான் உயிருடன் அவர்கள் மத்தியில் இருந்த போது அவர்களை கண்காணித்தவனாக இருந்தேன் என்பதுதான் பொருள் என்பதை சிந்தித்து உணர தவறிவிட்டார் பி.ஜே.

43:62 வசனத்தின் படி கியாமத் நாளின் அடையாளமாக ஈஸா இருப்பார் என்றால் இஸ்ரவேலர்க்கு மட்டும் வந்த அந்த ஈஸா நபி இறந்து விட்டதானால், அதே ஈஸா என்ற பெயரில் முழு உலகுக்கும் முஸ்லிம் உம்மத்தில் ஒருவர் வருவார் என்றே பொருள் – 43:62 இல் கியாமத் நாளின் அடையாளம் என்ற பொருளைக் காட்டிலும் அந்த நேரத்தின் அடையாளம் என்பதே சரியானதாகும். ஏனென்றால் அவ்வசனத்தில் இடம்பெறும் சொல் சாஅ என்பதாகும். இச்சொல் திருக்குரானில் இரு நபிமார்களின் தோற்றத்தையும் அவர்கள் மூலம் ஏற்படும் ஆத்மீகப் புரட்சியையும் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் குறிக்க வருகிறது. அவற்றுள் 1) திருக்குர்ஆன் 54:2– அந்த நேரம் வைத்துவிட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. இதன்படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சொல்லபப்ட்ட கியாமத் இன்று வரை நடக்கவில்லையே! என்ற கேள்வி எழும். எனவே, இங்கு சாஅ என்னும் சொல் ஒரு நபியின் தோற்றத்தைக் குறிக்கும் நேரத்தைக் குறிக்கிறது. அடுத்து சந்திரன் பிளந்துவிட்டது. இதன்படி சந்திரனாகிய அரபு உலகம் பிளந்து அங்கு இஸ்லாமிய உலகம் தோன்றியது. இஸ்லாம் முழு உலகிலும் பரவி ஆத்மீகப் புரட்சி ஏற்பட்டது. இரண்டாவதாக, 43:62 இன்படி கியாமத் நாள் என்று வரும் இடத்தில் சாஅ எனும் சொல் வருவதால் அந்த நேரத்தின் அடையாளமாக ஈஸா நபியின் இரண்டாவது வருகை நிகழும். இஸ்லாம் அனைத்து மார்க்கங்களையும் வெல்லும் என்று திருக்குர்ஆன் கூறும் அடையாளம் இதுதான் இந்த வசனங்களுக்கு (9:33; 48:29; 61:10) திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இது ஈஸா நபியின் வருகையின் போது நிகழும் என்று எழுதியுள்ளார்கள். (1. தப்ஸீர் ஜாமிஉல் பயான் தொகுதி 29, 2.தப்ஸீர் இப்னு ஜரீர் பாகம் 15; பக்கம் 72)

இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களே ஈசப்னு மர்யமாக தோன்றினார்கள். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மூலம் அனைத்து மார்க்கங்களும் வெற்றி கொள்ளப்பட்டன.

அந்த நேரத்தின் அடையாளம் என்ற வசனத்தின் முன் உள்ள வசனம் மர்யத்தின் மகன் உவமையாக எடுத்துரைக்கப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனை குறித்து கூச்சலிடுகின்றனர்.

இந்த வசனத்தில் ஈஸா நபி உவமையாகக் கூறப்படுவார் அதுவும் நபி (ஸல்) அவர்கள் உம்மத்திடம் கூறப்படும். அவ்வாறு கூறப்படும்போது அவர்கள் அதனை ஏற்காது கூச்சலிடுவார்கள் என மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸா நபிதான்  இமாம் மஹ்தி என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ் ஸமான்)

ஈஸா நபியின் இருவேறு உருவ அடையாளங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

நான் ஈஸாவையும்மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும்விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்) 

நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும்நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட போது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)

அப்படிஎன்றால் அவர் மரணிக்கும் முன் வேதமுடையவர்கள் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் (4:159) என்ற வசனத்திற்கு என்ன பொருள்?

ஈஸா நபி (அலை) உயிருடன் இருக்கிறார் என்றால், அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் கடந்த 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் சமுதாயத்தினர் இறந்து கொண்டே இருக்கின்றனரே! அந்த இஸ்ரவேல் சமுதாயத்தில் யாரும் இறக்காமல் அவரது இரண்டாவது வருகைக்காக கடந்த 2000 ஆண்டுகளாக உயிருடன் காத்துக் கொண்டு இருக்கின்றனரா? இல்லையே!


இமாம் மஹ்தி (அலை) அவர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கத்தை கப்லா மௌதிகி என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்துள்ளோம். 

ஈஸா நபி (அலை) வானத்திற்குச் சென்றார்கள் என்று நம்புவது இறைதூய்மைக்கு களங்கமாகும்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 10 இல் தூய்மையானவன் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்.

ஸுப்ஹான் என்பது கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன் என்பதே பொருளாகும்.
நம் விளக்கம்:

1. திருக்குரானில் 3:192 வது வசனத்தில் “அவர்கள் நின்று கொண்டும், ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை (எப்போதும்) நினைத்துக் கொண்டிருப்பார். எங்கள் இறைவா! நீ இதனை வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன், எனவே நீ எங்களை நெருப்பின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவாயாக!” (எனக் கூறுவர்).

இதில் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் வீணாகப் படைத்துள்ளான் என்று எண்ணுவது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதால் நீ தூயவன் என்று கூறப்பட்டுள்ளது.

2. திருக்குரானில் 5:117 வது வசனத்தின், “ மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லா கேட்ட போது, அவர் நீ தூயவன் எனக் கூறினார்.

இதில் ஈஸா நபியையும் அவருடைய தாயையும் இரண்டு தெய்வங்களாக ஆக்கிக் கொள்வது இறைவனின் தூய்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஆனால் இறைவனோ இந்தக் கலங்கத்தில் இருந்து தூயவன் ஆவான். என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

3. திருக்குரானில் 7:144 வது வசனத்தில், “ அவர் (மூஸா) என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! என்று வேண்டினார். இதற்கு அவன் உம்மால் என்னை ஒருபோதும் காணவியலாது. ஆயினும் மலையின் பக்கம் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காண்பீர் என பதிலளித்தான். பின்னர் அவருடைய இறைவன் மலையின் மீது தானே தோற்றமளித்த போது, அதனைத் தவிடு பொடியாக்கி விட்டான். மேலும் மூஸா மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு மயக்கம் தெளிந்த போது (என் இறைவா!) நீ எல்லாக் குறைகளிளிருந்தும் தூய்மையானவன்...” என்றார்.

இதில் ஒரு நபி இறைவனை தன் புறக்கண்ணால் காண்பது என்பது இறைவனின் தூய்மைக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும் என்ற கருத்தை இறைவன் கூறுகிறான்.

4. திருக்குரானின் வது 9:31 வசனத்தில், “அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் சமய அறிஞர்களையும் துறவிகளையும் இவ்வாறே மரியத்தின் மகன் மஸீஹயும் தங்கள் கடவுள்களாக ஆக்கிக் கொண்டனர்..... அவர்கள் வைக்கின்ற இணையை விட்டும் அவன் தூயவன்.”

இதில் அல்லாஹ் அல்லாத சமய அறிஞர்களையும் துறவிகளையும் இவ்வாறே மரியத்தின் மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக ஆக்குவது இனைவைத்தில் ஆகும். இது இறைவனின் ஸுப்ஹான் என்ற பண்புக்கு மாற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

5. திருக்குரானில் 21:23 வது வசனத்தில், “(வானங்கள், பூமி) ஆகிய அவ்விரண்டிலும் அல்லாஹ்வையன்றி வேறு கடவுளர்கள் இருந்திருப்பின் அவை இரண்டும் பெருங் குழப்பத்திற்கு இரையாகி அழிந்திருக்கும். எனவே அரியணைக்குரிய இறைவனாகிய அல்லாஹ் எல்லாக் குரிபாடுகளிலிருந்தும் அவர்கள் கூற்றிலிருந்தும் தூய்மையானவன்.”

இதில் வானங்கள் பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கின்றனர். என்று கூறும் குறைகளிலிருந்து அல்லாஹ் தூயவன் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள வசனங்களிலிருந்து நாம் விளங்குவது, அல்லாஹ்வுக்குப் பங்கம் விளைவிக்கும் – களங்கம் கற்பிக்கும் – ஒரு செயல் கூறப்பட்டால், அல்லா (அதனையே) ஸுப்ஹான் என்று கூறுவதன் மூலம் மறுப்பதைக் காணலாம். அதாவது அல்லாஹ் ஸுப்ஹான் என்று ஒரு வசனத்தில் கூறப்பட்டிருந்தால் அதற்கு மேலே அல்லாஹ்வுக்கு மாற்றமான, அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு பங்கம் உண்டாக்கும், களங்கமோ, கரையோ உண்டாக்கும் ஒரு செயல் கூறப்பட்டிருக்கிறது என்று விளங்குகிறோம். இந்த அளவுகோலின் அடிப்படையில் நாம் குரான் 17:94 ஆம் வசனத்தைக் காண்போம். 17:94 ஆம் வசனத்தில், மக்கத்து மக்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டு வராத வரை நீர் வானத்திற்கு ஏறிச் சென்றதையும் நாங்கள் நம்பமாட்டோம் என்று கூறுகின்றனர். அதற்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், என் இறைவன் தூயவன். நான் ஒரு மனிதனாகிய தூதரேயன்றி வேறு அல்லன் என்று பதில் கூறுமாறு கூறுகின்றான்.

இதில் இறைவன் தூயவன் என்ற சொல் ஒரு நபி உடலுடன் வாநிற்குச் சென்று மீண்டும் வருவது என்பது அல்லாஹ்வின் ஸுப்ஹான் என்ற பண்புக்கு மாற்றமானது என்றும், ஒரு மனிதத் தூதரால் அவ்வாறு உடலுடன் வானுக்கு ஏறிச் சென்று மீண்டும் திரும்பி வர முடியாது என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது.

பி.ஜே போன்ற மௌலவிகள், ஈஸா நபி தன் உடலுடன் வானுக்குச் சென்றுள்ளார். அவரே மீண்டும் வருவார் என்று நம்புவது, அல்லாஹ்வின் ஸுப்ஹான் என்ற இறை பண்புக்கு பங்கமும் களங்கமும் கற்பிக்கும் நம்பிக்கையாகும் என்றும் அப்படி நம்புவது ஈஸா நபியை ஒரு மனிதத் தூதர் இல்லை என்று மறுக்கும் செயலாகும் என்பதி நெஞ்சில் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்கள் தானும் வழ்கேட்டு, மக்கள் சமுதாயத்தையும் வழிகெடுத்து பாவத்திற்கு ஆளாக நேரும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அது மட்டும் இல்லை. ஈஸா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார். அவரே மீண்டும் வருவார் என்று நம்பினால், ஸுப்ஹான் தரும் கருத்தின் அடிப்படையில் கீழே வருபவற்றையும் நம்ப வேண்டியது வரும்.

1. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் வீணாகப் படைத்துள்ளான் என்று நம்புவதாக பொருள். (3:192)

2. ஈஸா நபியையும் அவருடைய தாயையும் இரு தெய்வங்களாக நம்புகிறார் என்று பொருள் (5:117)

3. மூஸா நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வை தம் புறக்கண்ணால் கண்டார் என்று நம்புவதாக பொருள். (7:144)

4. சமய அறிஞர்களையும் துறவிகளையும் ஈஸா நபி (அலை) அவர்களையும் ரப்புகளாக ஏற்றுக் கொள்கின்றனர் என்று பொருள். (9:31)

5. வானம், பூமி ஆகியவற்றுள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருப்பதாக நம்புகிறார் என்று அர்த்தம். (21:23)

6. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை உருவாக்கிக் கொண்டான் என்று நம்புகிறார் என்று பொருள். (21:27)

7. அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு படைத்தல், உணவு கொடுத்தல் மரணத்தைக் கொடுத்தல், உயிர் கொடுத்தல் ஆகிய ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறார் என்று பொருள். (30:41)

அல்லாஹ் உங்களையும் என்னையும் ஈஸா (நபி) உடலுடன் வானுக்கு உயர்த்தபப்ட்டுள்ளார் என்று நம்பி ஸுப்ஹான் என்ற பண்புக்கு களங்கள் கற்பிப்பதிலிருந்தும் மேலே காட்டியுள்ள ஷிர்க்கான நம்பிக்கையிலிருந்தும் காத்தருள்வானாக! ஆமீன்.