சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குர்ஆன் பல வசனங்களில் ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க முடியாது என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதாம் பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்.
அப்படியே பாவம் செய்தாலும் இன்னொருவரது பாவத்தைச் சுமக்க முடியுமா? அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொசுக்கப்படுவாரா? என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.

மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.

நம் விளக்கம்:

1.       ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைப் பிடிப்பதற்காகச் சென்ற போது, அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்து ஈஸா நபியைக் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். கைது செய்ய வந்தவர்களுள் ஒருவன் ஆள்மாராட்டத்தினால் ஈஸா நபி எனப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான் என்று கற்பனைக் கதையை பி.ஜே நம்புகிறார். (ஆதாரம்: 4:157 பி.ஜே மொழியாக்கம்) மேலே அவர் கூறிய படி ஈஸா நபிக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டவன், அந்தச் சம்பவத்தில் எக்குற்றமும் செய்யாதவன். இவ்வாறு அக்குற்றத்தில் சம்பந்தமில்லாத ஒருவனைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஆகாத?

2.       திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தில், “ அவர் கூறினார்; நாங்கள் எவரிடத்தில் எங்கள் பொருள்களைக் கண்டு பிடித்தோமோ அவரைத் தவிர வேறொருவரை நாங்கள் பிடிப்பதிலிருந்து இறைவனிடம் அடைக்கலம் தேடுகிறோம். நாங்கள் அவ்வாறு செய்தால் அநீதி இழைத்தவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவோம். என்று வருகிறது. அதாவது குற்றவாளியை விட்டுவிட்டு அதில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பிடிப்பதைப் அநீதி இழைத்தல் என்றும் அவ்வாறு செய்யாதிருக்க அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதாகவும் இந்த வசனம் கூறுகிறது”. ஆள் மாறாட்டத்தால் வேறு ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அது அநீதி ஆகாதா?

3.       அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்துதான் யூதர்களிடமிருந்து தன் நபியை காப்பாற்ற வேண்டுமா?

4.       ஆள்மாறாட்டம் செய்து அப்பாவி ஒருவனைச் சிலுவையில் அறைந்து கொள்ளாமல் தன் நபியைக் காப்பாற்ற அல்லாஹ்வால் முடியாதா?

5.       ஷுப்பிஹலஹும் எனும் சொற்றொடருக்கு ஆள் மாறாட்டம்தான் பொருள் என்பதை பி.ஜே திருக்குரானிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் அகராதியிலிருந்தும் தக்க சான்றுகள் தந்து நிரூபிக்க முடியுமா? எனவே இதை பி.ஜே யின் பொருள் மாறாட்டம் என்று கூறலாமா?

6.       தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள ஏறக்குறைய தர்ஜுமாக்களில் ஆள்மாறாட்டம் எனும் பொருளைக் காண முடியவில்லையே என்?
7.       ஆள்மாறாட்டம் போன்ற இழி செயல்களை அல்லாஹ் செய்வானா?

8.       ஒரு தூய நபியின் தோற்றத்தைச் இன்னொரு மனிதனுக்கு அல்லாஹ் கொடுப்பானா?

9.       ஆள் மாறாட்டத்தில், சிலுவையில் அறையப்பட்டவனின் மனைவி, மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? பி.ஜே இப்படித்தான் இருப்பார் போலும்.

10.   ஈஸா நபியின் உருவம் கொடுக்கப்பட்டவர், தோற்றத்தில் மட்டும்தான் மாறினாரா? உள்ளத்தாலும் மாறினாரா?

ஆதாம் பாவம் செய்தால், ஆதமுடைய பிள்ளைகள் யாவும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை என்று கூறுகிறார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265) இதில் பரம்பரை பாவம் இல்லை என்கிறார்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15-இல் அனைவரும் வெளியேறுங்கள் எனும் தலைப்பில் உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூரபட்டுள்ளது என்று பி.ஜே எழுதியுள்ளார்.

ஆதம் நபி செய்த தவறு அவரது சந்ததியில் அனைவரையும் பங்காளியாக்கிவிட்டது. இவ்வாறு கடைசி மனிதன் வரை பரம்பரைப் பாவம் பாதித்து விட்டது என்கிறார்.

இந்த சுய முரண்பாடு ஏன்? இவ்விரண்டில் எது சரி?

முன்னது சரி என்றால், பின்னது தவறாகு. எந்த அளவுக்கு என்றால், ஆதம் நபியும், அன்னை ஹவ்வாவும் செய்த பாவங்களுக்காகப் உஅலக மனித இனம் முழுமையும் சொர்க்கத்தை இழந்து, மண்ணில் பிறந்து வளர்ந்து, மண்ணைத் தின்று மண்ணோடு மண்ணாக மடிகிறோம். இவ்வாறு பரம்பரை பாவத்திற்கு ஆளாகி விட்டோம் என்று 100% கிறிஸ்தவக் கொள்கையை பி.ஜே நம்புகிறார் என்று பொருள். இவ்வாறு இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கையை பி.ஜே தவிடுபொடியாக்கி விட்டார். 

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது JAQH எனும் பெயரில் இயங்கிய இவர்களும் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவதாகத்தானே நம்புகிறார்கள் என நாம் கருதி, ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கே செல்லவில்லை என்ற கருத்தை எடுத்துக் கூறியபோது அதை P.J மறுத்தவாறு, வானம், வானம் என நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அந்த வார்த்தையைக் கூறவே இல்லை என பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். 

1994-ஆம் ஆண்டு விவாதத்தில் வானம் என்ற வார்த்தையை பகிரங்கமாக மறுத்த P.J ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 53 இல் ‘ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என முரண்பட்டு எழுதியிருக்கிறார். இவ்வாறு முரண்படுவது அவரது வாடிக்கையும் அதைக் கண்டு நாம் வேடிக்கை காண்பதும் புதுமையானது ஒன்றல்ல. ஆயினும் நடுநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்வோம்: ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த ஒரு ஹதீஸிலும் வராதபோது, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என நேரடிப் பொருளில் எப்படிக் கூறுகின்றீர்கள் என நாம் ஆலிம்களிடம் வினா கொடுத்த பிறகுதான் அவர்கள் தம் அறியாமையை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். இதில் P.J யும் அடங்குவார். எனவேதான், கோவை விவாதத்தில் கூட ஈஸா நபி வானில் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரால் நிரூபிக்க முடியாமற்போனது மட்டுமின்றி, ‘வானம்’ என்ற வார்த்தையை பகிரங்கமாக வாபஸ் வாங்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். 

ஆனால் இப்போது அதே P.J ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்ற முரண்பட்ட ஒரு செய்தியை ஏகத்துவ இதழில் எவ்வித ஆதாரமுமின்றி எழுதியுள்ளார். 

எந்த ஒரு சஹீஹான ஹதீஸிலும் ஈஸா(அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவார் என வரவில்லை! ஒரு வாதத்திற்காக நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருதல் என பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில், இறங்குதல், இறக்குதல் என்ற இதே சொல்லை இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான். அங்கே P.J உட்பட எவரும் நேரடியாக, வானிலிருந்து இறங்குதல், இறக்குதல் என்ற பொருளைக் கொடுக்கவில்லை. உதாரணமாக, 

கத் அன்ஸலல்லாஹு இலைக்கும் திக்ரன் ரஸுலன். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக் கூடிய இறைத்தூதரை இறக்கியுள்ளான். (65:11) 

இங்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி ‘அல்லாஹ் இறக்கியுள்ளான்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளான். ஆனால் அன்னார் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தார்களா? இல்லையே! மாறாக, P.J உட்பட இந்த வசனத்திற்கு ‘அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை அனுப்பியுள்ளான் என்றே மொழி பெயர்த்துள்ளார். (P.J மொழியாக்கம் வசனம் 65:11 பக்கம்,826 காண்க ) 

2. வ அன்ஸல லக்கும் மினல் அன் ஆமி ஸமானியத்த அஸ்வாஜ். அவன் கால்நடைகளுள் எட்டு இணைகளை உங்களுக்கு இறக்கியுள்ளான். (39:7) இந்த வசனத்தில் அன்ஸல (இறக்கினான்) என்ற சொல் வந்தபோதிலும் கால்நடைகளை வானத்திலிருந்து இறங்கியதாக யாரும் பொருள் கொடுப்பதில்லை!

3. வ அன்ஸல்னல் ஹதீத. நாம் இரும்பை இறக்கியுள்ளோம். (57:26) 

இங்கேயும் P.J இரும்பு வானத்திலிருந்து இறங்குவதில்லை என்பதை அறிந்து ‘இரும்பையும் அருளினோம்’ என உஷாராக மொழிபெயர்த்துள்ளார். (P.J. மொழியாக்கம் பக்கம் 799 காண்க). இங்கு உஷாராக இருக்கும் அவர் இதே சொல் ஈஸா (அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் நேரடிப்பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என கராராக இருக்கிறார்!

4. கத் அன்ஸல்னா அலைக்கும் லிபாஸன் என அல்லாஹ் கூறுகிறான். அதாவது நாம் உங்களுக்கு ஆடையை இறக்கினோம் என்பது இதன் நேரடிப் பொருளாகும். ஆனால் ஆடையை உங்களுக்கு ‘அருளினோம்’ என P.J தமிழாக்கம் செய்துள்ளார். (வசனம் 7:26 பக்கம் 242) 

ஆக, திருக்குர்ஆனில் அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கால்நடைகளைப் பற்றியும், இரும்பைப் பற்றியும், ஆடையைப் பற்றியும் ‘இறக்கினோம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அவ்வனைத்து இடங்களிலும் எல்லா முஸ்லிம்களும் அஹ்மதி முஸ்லிம்களைப் போன்றே வழங்குதல், அனுப்புதல், அருளுதல் என்ற பொருளையே கொடுத்துள்ளனர். இதில் நமக்கும் பிற முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படியிருக்கும்போது, இதே சொல் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என்று நேரடியான பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இதிலிருந்து இவர்கள் நுஸுல் (இறங்குதல்) என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டே ஈஸா நபி விஷயத்தில் மட்டும் சொந்த கைச்சரக்கைத் திணிக்கப் பார்க்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

ஹதீஸில் ஈஸாவைப் பற்றி நஸல (இறங்குவார்) என்ற சொல் தானே வருகிறது என்ற ஐயத்திற்கு மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலேயே நமக்கு தெளிவு கிடைத்துவிட்டது. எனினும் ஹதீஸிலும் இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான இரு உதாரணங்களை கீழே தருகின்றோம்: 

1. அன்னன் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நஸல தஹ்த்த ஷஜரத்தன். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் இறங்கினார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 7 பக்கம் 59) 

2. கான இஸா நஸல மன்ஸிலன் பீ ஸபரின் லம் யர்த்தஹில் ஹத்தா யுஸல்லீ பீஹீ ரக்அதைனி, அதாவது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தங்கிய பிறகு இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு பயணம் மேற்கொள்வார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 4 பக்கம் 19) 

ஹதீஸில் ஈஸாவுக்கு வந்துள்ள நுஸுல் என்ற சொல்தான் இந்த ஹதீஸுகளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் வந்துள்ளது. இங்கெல்லாம் முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வானிலிருந்து இறங்கினார்கள் எனப் பொருள் கொடுப்பதில்லை. இதே சொல் வழக்கு ஈஸா நபிக்காக வரும்போது மட்டும் அதற்கு நேரடிப் பொருள்தான் கொடுக்க ஆலிம்கள் துடிப்பதைக் காணும்போதுதான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக நேசம் கொண்டுள்ள நாம் துடிதுடித்துப் போகிறோம். 

‘இப்னு மர்யம் உங்களிடத்தில் இறங்கும்போது’ என ஹதீஸில் வந்துள்ளதென்றால் அதே மாதிரிதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறக்கினோம் என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். ஈசாவுக்கு நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கும் அதே பொருளைத் தர வேண்டும். தருவார்களா? தந்ததில்லை: தருவதுமில்லை: தரவும் மாட்டார்கள். அப்படியானால் ஈஸாவுக்கு வரும்போது மட்டும் நேரடிப் பருளைத் தர முற்படுவது நியாயமானதல்ல என்பதை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டவர்களால் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. இவர்களின் இச்செயல் ‘உண்மையிலேயே இது முறையற்ற பங்கீடாகும்’ (53:23) என்ற இறை வசனத்தையே நமக்கு நினைவூட்டுகிறது!

அடுத்து, ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும்போது இறை தூதராக வர மாட்டார். எனவும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 64) 

இதுவும் அப்பட்டமான பொய்யும், இட்டுக்கட்டும் ஆகும், இறை தூதராக வர மாட்டார் எனப் பொருள்படும் ஹதீஸின் அரபிச் சொல்லை இதுவரை எந்த ஆலிமும் எடுத்துக் காட்டவில்லை. P.J க்கும் நாம் சவாலாக விடுக்கிறோம். ‘இறை தூதராக வரமாட்டார்’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் எதில் இடம் பெற்றிருக்கிறது? அதன் அரபி வாசகம் என்ன? என்பதைக் காட்டத் தயாரா? இவர்களால் காட்டமுடியாது என்பதற்கு கடந்த காலமே சான்று. 

ஆனால் நடுநிலையாக சிந்திக்கும் வாசகர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்: இந்த ஆலிம்கள் கூறுவதற்கு நேர்மாறாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தோன்றவிருக்கும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, நபியுல்லாஹி ஈஸா (அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா) என ஒரு முறை அல்ல: நான்கு முறை குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 4 பக்கம் 878-882 ஹதீஸ் எண்: 5629காண்க) இந்த ஹதீஸை P.J யும் ஸஹீஹானது என ஒப்புக்கொண்டவாறு தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம்55) 

ஆனால் அதற்கு முரண்பட்டவாறு ‘நபியாக வர மாட்டார்’ என ஏகத்துவம் பக்கம் 54 இல் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவர் குழம்பிப் போயிருக்கிறார்: ஒரு நிலைப்பாட்டில் இல்லை. அல்லது தெரிந்து கொண்ட மக்களைக் குழப்ப முயற்சிக்கிறார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா எனக் கூறிவிட்ட பிறகு இதில் இரண்டாம் கருத்து கொள்வதற்கோ, இரண்டாம் கருத்து கொடுப்பதற்கோ இங்கு இடமேயில்லை. 

அது மட்டுமின்றி, ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற நபிமொழியையும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் பக்கம் 55) 

வஹி அறிவிப்பான் என்ற அரபிச் சொல்லைத்தான் P.J ‘அல்லாஹ் செய்தி அனுப்புவான்’ என மொழிபெயர்த்துள்ளார். ஆக, இந்த நபிமொழியிலிருந்து வஹி வருவது நின்று விட்டது என்ற முஸ்லிம்களின் தவறான நம்பிக்கையும் அடிபட்டுப் போகின்றது. இந்த உம்மத்தில் தோன்றும் ஈஸாவுக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அடுத்து, ஈஸப்னு மர்யம் முஸ்லிம் உம்மத்தில் தோன்றுவார் எனும் பொருள் பட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்: 

கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும். அதாவது (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார். (புகாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்: 3449) 

இந்த நபிமொழிக்கு P.J. இவ்வாறு தவறான பொருள் கொடுக்க முனைந்துள்ளார்: 

“உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும்போது, ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏகத்துவம் பக்கம் 54) 

இந்த நபிமொழியில் இரண்டு வாக்கியங்கள் அமைந்துள்ளன. ஒன்று கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் என்பது. அடுத்து வாவு (மேலும்) வந்துள்ளது. பிறகும் இமாமுக்கும் மின்கும் என வந்துள்ளது. 

அரபி மொழியில் வாவு மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றது: 1. வாவு அத்ப் (மேலும் என்ற பொருளில்) 2. வாவு கஸ்மிய்யா (சத்தியமாக என்ற பொருளில்) 3. வாவு ஹாலிய்யா (நிலையை விளக்குவதற்கு வருவது.) 

இங்கே P.J நிலையை விளக்குவதற்காக வந்த ‘வாவு’ என தவறான பொருளைக் கொடுக்க முனைத்துள்ளார். எனவே. ஈஸா நபி வேறு; இமாம் வேறு என்று அவர் தவறாக புரிந்து வைத்துள்ளதற்கேற்ப, உங்கள் இமாம் உங்களை சார்ந்தவராக இருக்கும்போது (இருக்கும் நிலையில்) ஈஸா மேலிருந்து இறங்கி வருவார் என தவறாகப் பொருள் கொடுத்துள்ளார். அதாவது இமாம் மஹ்தி உங்கள் மத்தியில் இருக்கும்போது, ஈஸா வானிலிருந்து இறங்குவார் என்ற தவறான பொருளைக் கொடுத்துள்ளார். ஆனால் இங்கு வந்துள்ள ‘வாவு’ அத்ப் எனும் வாவாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்களின் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார் என்றே பொருள்படும். அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும் ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். 

இதனை நாம் அனுமானமாகக் கூறவில்லை. ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீஸ் நமது கருத்துக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. அதில் இவ்வாறு வருகின்றது:

கய்ப அன்த்தும் இஸா நஸல பீக்குமுப்னு மர்யம் பஅம்மக்கும் மின்க்கும். பொருள்: (முஸ்லிம்களே!) உங்களுக்கு மத்தியில் ஈசப்னு மர்யம் தோன்றும் போது உங்களின் நிலை எப்படி இருக்கும்? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமத் செய்வார் என ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம்:185 ஹதீஸ் எண்:246) 

இங்கு நஸல (தோன்றும்போது) என்ற வினைச் சொல்லையும், அம்ம (இமாமத் செய்வார்) என்ற வினைச்சொல்லையும் ஒரே எழுவாயுடன் சேர்த்து ஹசரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது ஈஸப்னு மர்யம் என்பதுதான், எனவே முஸ்லிம்களே! உங்களிலிருந்து தோன்றும் ஈஸப்னு மர்யம்தான் இமாமாக இருப்பார் என்ற கருத்து நமது சுய கருத்து அல்ல. மாறாக, இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த கருத்தாகும்!

இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கின்றது: 

“உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும், நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்.” (முஸ்னத் அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411) 

இந்த ஹதீஸில் இன்பு மர்யம்தான் இமாம் மஹ்தி (நேர்வழி காட்டப்பட்ட மஹ்தி) ஆகவும், ஹகம் (தீர்ப்பளிப்பவர்) ஆகவும், அத்ல்(நீதி வழங்குபவர்) ஆகவும் இருப்பார் என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள். 

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்: 

“வரக் கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல் புகாரி அவர்கள் சைகையாகக் கூட கூறவில்லை! இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள். அவை முதல் மஸீஹ் வேறு: இரண்டாவது மஸீஹ் வேறு எனத் தீர்ப்பளித்து விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்து தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, ‘அவர் உங்களிலிருந்து தோன்றும் உங்களின் ஓர் இமாம் ஆக இருப்பார்’ என விளக்கிக் கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்........

ஆக, மர்யமின் மகன் என்ற சொல்லினால் மனதில் தோன்றுவதற்கு சாத்தியமாக இருந்த கருத்தை நீக்குவதற்காக இந்த சொற்களுக்குப் பிறகு, ‘உண்மையிலேயே மர்யமின் மகன் எனக் கருதிக் கொள்ளாதீர்கள்; பல் ஹுவ இமாமுக்கும் மின்க்கும் (மாறாக, அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார்)’ என விளக்கவுரையாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்.” (இஸாலே அவ்ஹாம், ரூஹானி கஸாயின் தொகுதி 3பக்கம்: 124) 

தொடர்ந்து கூறுகிறார்கள்: 

“மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் எனபதைத் தீர்மானிக்கும் இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும், இரண்டாம் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.” (இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 124) 

ஆம்! ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இரு வேறுபட்ட ஈசாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆலிம்கள் மறைத்து விடுகின்றனர். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தில் தோன்றிய ஈசா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 

“நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும், சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்.” (புகாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438) 

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தொன்றவிருந்த ஈஸப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றிக் கூறும்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு வேறுபடுத்திக் கூறியிருக்கிறார்கள். 

ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில் காபாவை வளம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்...........இவர் யார்? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது. (புஹாரி கிதாபுல் பிதன் பாகம் 2 பக்கம் 1376 புதிய பதிப்பு ஹதீஸ் எண் 3440 மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277) 

இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி விட்டார்கள். 

முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதிலிருந்து அவர் மூஸா வின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் தஜ்ஜாலின் குழப்பம் மிகுந்த காலத்தில் தோன்றுவதாகக் கூறப்பட்டதிலிருந்து அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்திவிட்டார்கள். 

அடுத்து ஈஸா(அலை) அவர்களின் பணிகளைப் பற்றி புகாரி 2476, 3448, 3449 ஆகிய நபிமொழிகளில் வருகின்ற முன்னறிவிப்புகளுக்கும் வழக்கம் போல் எல்லா மௌலவிகளும் பொருள் கொடுப்பதைப் போன்றே பி.ஜே யும் பொருள் கொடுத்து தமது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.! உதாரணமாக, அவர் சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொள்வார்: ஜிஸ்யா வரியை நீக்குவார்: வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும் என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு இவற்றிற்கெல்லாம் நேரடியான பொருளை கொடுத்துள்ளார். 

இவ்வாறு நேரடி பொருள் கொடுத்தல் இந்த ஹதீஸுகள் அனைத்தும் அனர்த்தமாகிவிடும். மார்க்கத்தில் எவ்வித பலவந்தமும் இல்லை என்ற வசனம் திருக்குர்ஆனில் இருக்கும்போது அவர் எப்படி சிலுவையை முறிப்பர்? அது பலவந்தமாகாதா? அப்படியே அவர் சிலுவைகளை முறிக்கும் பணியில் அவர் ஈடுபட்டாலும் கிறிஸ்தவர்களால் மீண்டும் சிலுவைகளை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன? அவ்வாறே பன்றிகளைக் கொல்லுதல் என்பது ஒரு நபியின் கண்ணியத்திற்கு இணக்கமான செயலா என்ன? உலகத்திலுள்ள பன்றிகளை கொல்வதற்கே அவருக்கு நேரம் போதாத போது பிற மார்க்கப் பணிகளை செய்ய அவருக்கு எங்கிருந்து நேரம் இருக்கும்? ஆதமின் மகனின் பேராசையைப் பற்றிக் குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள், மனிதனின் பேராசையை மண்ணறையின் மண்தான் நிறைவேற்ற முடியும் எனக் கூறியிருக்கும் போது ‘வரவிருக்கும் மஸீஹ் செல்வத்தை வாரி வழங்குவார்; அதனை எவரும் வாங்க மாட்டார்’ என்ற இந்த ஹதீஸ் அதற்கு முரண்படுகிறதே? இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இதற்கு நேரடியானப் பொருள் கொள்ள முடியாது; இவை உவமையாகக் கூறப்பட்டவை என்பதை சாதாரண முஸ்லிமாலும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு விளக்கமளித்தவாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 

“இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வரும் போது சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொல்வார். ஒற்றைக் கண் தஜ்ஜாலைக் கொல்வார்; எந்த காபிர் வரை அவருடைய மூச்சுக் காற்று சென்றடையுமோ அவர் உடனே மரணித்துவிடுவார் என்பதாகும். எனவே இந்த அடையாளத்திற்கு ஆன்மீகமாகக் கொள்ளப்பட்ட உண்மையான கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை மதத்தின் மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களில் கீழ் போட்டு நசுக்கிவிடுவர். மேலும் எவர்களிடம் பன்றியின் வெட்கம்கெட்ட தன்மையும், அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின் மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்.”(இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 142)

இயேசுவின் இரண்டாவது வருகை - ஒரு தவறான கண்ணோட்டம்


'இரண்டாவது வருகை' பற்றிய நம்பிக்கை இயேசுவின் காலத்தில் கூட இருந்தது. எலியா தீர்க்கதரிசி மீண்டும் வருவார் என அக்காலத்து யூதர்கள் நம்பினார்கள். (இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.) ஏனெனில் பழைய ஏற்பாட்டில் ,

"எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு ஏறிப்போனான்" (11 இராஜாக்கள் 2:7)

என்று காணப்படுகிறது. ஆனால் எலியா வானத்திலிருந்தோ பரலோகத்திலிருந்தோ வருவார் என்பதை இயேசு ஏற்கவில்லை. புதிய ஏற்பாட்டில் இவ்வாறு காணப்படுகிறது. :-

"அப்போது அவருடைய சீசர்கள் அவரை நோக்கி அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் கொள்கிறார்களே, அதெப்படி என்று கேட்டார்கள் - இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தமாக எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவார் என்பது மெய்தான் - ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10)

இதில், எலியா வரவேண்டும் என்பதை இயேசு ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதே எலியா மீண்டும் வருவார் என்பதை அவர் ஏற்கவில்லை. சென்று போன எலியா வராத நிலையில் எலியா வந்தாயிற்று என்று அவர் கூறியதிலிருந்து எலியா வருவாரென்பது அதே எலியா மீண்டும் வருவதைக் குறிக்காது. மாறாக அவரைப் போன்ற இன்னொருவரின் வருகையையே அது குறிக்கும் என இயேசு கருதினார் என்பது தெளிவாகிறது. சென்று போன ஒருவர் மீண்டும் வருவார் எனக் கூறப்பட்டால் அவருடைய 'ஆவியிலும் தத்துவத்திலும்' இன்னொருவர் வருவார் என்பது இயேசுவின் கருத்து. இயேசுவின் இந்தக் கருத்திற்கு முரண்படுகின்ற வகையில், இயேசு மீண்டும் வருவார் என்று கிருஸ்தவர்கள் நம்புகின்றனர். இது போன்ற ஒரு தவறான நம்பிக்கையைக் கைக்கொண்டிருந்ததால்தான் எலியாவை எதிர்பார்த்து இயேசுவை ஏற்காது யூதர்கள் வழி கெட்டுப் போனார்கள்.

இயேசுவின் கருத்தின் படி இயேசு மீண்டும் வருவார் என்பது இயேசுவைப் போன்ற இன்னொருவரின் வருகையையே குறிக்கும். இயேசுவின் இந்த இரண்டாவது வருகை இன்றிலிருந்து நூறாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.

அஹ்மதிய்யா ஜமாஅத் என்ற அமைப்பை தோற்றுவித்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள். நான் கிருஸ்தவர்களுக்கு இயேசுவாகத் தொன்றியுள்ளேன் என்றும் எனது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிகழ்ந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்கள். எனவே கிருஸ்தவர்கள் எண்ணிக்கொண்டிருப்பது போன்று இயேசு மீண்டும் வரப்போவதில்லை இயேசுவிற்கு உடன்பாடில்லாத இந்தத் தவறான நம்பிக்கையை கிருஸ்தவர்கள் கைவிட்டுவிட்டு இக்காலத்தில் இயேசுவாகத் தோன்றி யிருப்பவரை ஏற்க முன்வரவேண்டும்.

இயேசு வந்துவிட்டார் - 2


இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 

இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 

‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 

“இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 

எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே..... அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 

‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 

மேலும். ‘........... அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 

மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.

கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘............உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக........’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்..........’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 

மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 

இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 

இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 

இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.

இரண்டாவது இயேசு வந்து விட்டார் -1


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன் வானத்திலுருந்து எல்லோருடைய கண்களும் காணும்படி வெளிப்படையாக தோன்றுவதாக இருந்தால், அவர் எக்காளச் சத்தத்தோடு தமது தூதுவர்களை அனுப்புவதாக இருந்தால், இவ்வுலகில் உள்ள எந்த மனிதனும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. வானத்திலிருந்து மேகங்கள் சூழ மனுஷ குமாரன் இறங்கி வருவது யாருடைய கண்களுக்குத்தான் தெரியாமல் போகும்? அப்படி எவனாகிலும் ஒருவன் மனுஷ குமாரன் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் அவனை மானிடப்பிறவி என்று நாம் எவ்வாறு கூறமுடியும். 

இறைவன் கையாளும் வழிகள் இப்படிப்பட்டவை அல்ல, நல்லவர்களையும், தீயவர்களையும் பிரித்தறிவதற்காக இறைவன் சில ஒழுங்குமுறைகளை செய்திருக்கின்றான். அவற்றின்படி நல்லவர்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கெட்டவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள், நேர்மையாளர்களையும், நெறிதவறியவர்களையும் இவ்விதம் பிரிதரிந்தால் தான் (எல்லா வேத நூற்களிலும் சொல்லப்பட்டபடி) அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ கொடுக்கமுடியும். இவ்விதம் பிரித்தறியாவிட்டால், தண்டனை பெறுவோரும், வெகுமதியடைவோரும் ஒன்றாக அல்லவா கருதப்படவேண்டும்? அப்படியானால், ஒருவன் எத்தனையோ சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உட்பட்டு தேடிய நற்கருமங்களுக்கு இறைவன் ஒரு பலனையும் தரமாட்டன் என்றும், ஒருவன் எப்படிப்பட்ட தீய வழியை பின்பற்றியிருந்தாலும், எத்தகைய கொடுமை இழைத்திருந்தாலும் அவனுக்கு எவ்வித தண்டனையும் கிடையாதென்றும் , மனுஷ குமாரன் வானத்திலிருந்து எக்காளமிட்டுக்கொண்டே தோன்றும் காலத்தில் இவ்விருசாராரையும் இறைவன் ஒன்றாகவே பாவிப்பான் என்றும் நாம் கூறவேண்டியதிருக்கும்.

மனுஷ குமாரன் இவ்விதம் பகிரங்கமாக எக்காளச் சப்தமிட்டு உலகத்தில் இருப்போர் அத்தனைபேரையும் தட்டி எழுப்பச் செய்வாரென்றும், அவர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டு மேகங்களிலிருந்து கீழே இறங்கி வருவார் என்றும் பிரசாரம் செய்யும் கிருஸ்தவர்கள் கீழ்க் கண்ட வேதாகம வாக்கியங்களை ஏன் மறந்துவிடுகிறார்கள்? என்பது நமக்கு விளங்கவில்லை.

"மனுஷ குமாரன் வரும் நாளையும், நாழிகையையும் நீங்கள் அறியாதிருக்கிற படியால் விழித்திருங்கள். (மத்தேயு 25:13)

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டு எஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கண்காணிப்பான் என்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்: ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் ." (மத்தேயு 24:42-44)

"அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து..." (மத்தேயு 24:60)

இவ்வாக்கியங்களிளிருந்து ஒரு திருடனைப்போல் சப்தம் செய்யாமல் அமைதியாக வந்து சென்று விடுவாரென்றும், அவர் வருகின்ற நாளும் நாழிகையும் மக்களுக்கு தெரியாதென்றும் புலப்படுகின்றது.

"அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகிந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." (மத்தேயு 24:30) 

என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது உண்மையே, நாம் முன்னர் கூறியபடி இந்த வாக்கியத்திலுள்ள ஆழிய கருத்தை ஆராய்ந்து உணராமல் ஆதிகால யூதர்கள் செய்தது போன்றே மேலெழுந்த வாரியான அர்த்தம் கற்பித்து உண்மையான கருத்தை கைநழுவ விட்டுவிட்டார்கள், நமது மதிப்பிற்குரிய சகோதரர்கள்.

யூதர்கள் ஒரு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை வைப்பதற்காக, முந்தைய வேதத்தில் சொல்லப்பட்ட படி ஒரு எலியாவை (இலியாஸ்) வானத்திலிருந்து எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தப்படி எலியா வானத்திலிருந்து இறங்கி வராமல் அவர்களுக்கு மத்தியிலேயே ஒரு சாதாரண மனிதனாக ஒரு யோவானாக தோன்றியதால், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்து யூதர்களின் ராஜா வாகத் தோன்றுவார் என்று யூதர்கள் நம்பியிருந்தார்கள். ஆகவே ஒரு ஏழை நாசரேயனாகிய ஏசுவைக் கிறிஸ்துவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .

இயேசு தம்மைக் 'கிறிஸ்து' வாக வாதிடும் காலத்தில் யூதர்கள் அவரை நோக்கி: "கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா வானத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே, அவர் இன்னும் வரவில்லையே என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா தோன்றுவார் என்பது உண்மையே. ஆனால் எலியா தோன்றிவிட்டார். யோவான் தான் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா என்று இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறிவிடவில்லையா?

இதன்படி, யூதர்கள் எண்ணி இருந்ததைப்போல, எலியா வானத்திலிருந்து ஒருபோதும் தோன்றமாட்டார் என்பதும் எலியாவின் ஆவியிலும் பலத்திலும் மற்றொருவரே தோன்றுவார் என்பதும், அந்த மற்றொருவர் யோவானே என்பதும் நிரூபணம் ஆகிவிடவில்லையா? இயேசு கிறிஸ்து இப்படி கூறியதால் முந்திய வேதங்களிலுள்ள வாக்கியங்கள் பொய்யாகி போய்விட்டனவா? இல்லையே! பின்னர் யூதர்கள் ஏன் இயேசுவின் சொற்களை ஏற்றுக்கொள்ளாமல், எலியா இன்னும் வானத்திலிருந்து தோன்றவில்லை, ஆகவே கிறிஸ்து என்று வாதிடும் இந்த இயேசு ஒரு கள்ள தீர்க்கதரிசி தான் என்று முடிவு செய்து அவரை சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாக்க விரும்பி, சிலுவையில் அறைந்து கொடுமை செய்தார்கள்?

"இவ்வளவு பெரிய கொடுமையையும், தவற்றையும் யூதர்கள் செய்ததற்கு காரணம் என்ன ஒரேஒரு காரணம்தானே!

வேத வாக்கியங்களை அப்படியப்படியே மேலெழுந்த வாரியாக அவற்றின் சொற்பொருள்படி யூதர்கள் பின்பற்றினார்கள்; அவ்வாகியங்களில் பொதிந்துள்ள கருத்தை அவற்றில் சொல்லப்பட்ட விசயங்களை பின்பற்றவில்லை. யூதர்கள் எலியா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் இளைத்த துண்பம்களுக்கெல்லாம் இதுதான் மூல காரணம். வேத வாக்கியங்களில் நிறைந்துள்ள வார்த்தைகளை யூதர்கள் பின்பற்றினார்கள்: அவற்றின் அடியிலுள்ள விஷயத்தை விட்டுவிட்டார்கள். கிருஸ்தவர்கள் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் வேதாகமத்திலேயே இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது. பிறகு எவ்வாறு கிறிஸ்தவர்களால் இதனை மறுத்துக் கூறமுடியும்?

எப்படியிருப்பினும், அப்பலங்கால யூதர்கள் செய்த தவற்றையே அறிவியல் அறிவு மிகுந்த இக்காலத்தில்- கல்வி அறிவு நிறையப்பெற்ற கிருஸ்தவ சகோதரர்களும் செய்து வருவது விந்தயில்லையா? மனுஷ குமாரன் மேகங்களிலிருந்து பூமியில் வந்திறங்குவார் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதால், வானத்திலிருந்து இறங்கிவரக்கூடிய ஒரு மனுஷ குமாரனையே இவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கிறிஸ்து தோன்றும் முன்னர், எலியா, தோன்றுவார் என்று முந்தய வேத நூற்களில் சொல்லப்பட்டிருந்தும் மரணித்துப்போன அதே பழைய எலியாதான் உயிரோடு மீண்டும் யூதர்களுக்கிடையில் தோன்றினாரா? அல்லது இயேசு கிறிஸ்துதான் அந்த மூடக் கருத்தை ஆதரித்தாரா? இரண்டும் இல்லை. மரணித்துப்போன எலியா மீண்டும் தோன்றுவாரென்றால், எலியாவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்றுதான் பொருள் என இயேசு கிருஸ்துவே விளக்கிக் கூறி யூதர்களின் அறிவிற்கு புறம்பான நம்பிக்கையை இடித்துரைக்கவில்லையா?

அப்படியானால், இயேசு இரண்டாம் முறையாகத் தோன்றுவாரென்று கிருஸ்தவர்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தால், அவர்கள் வானத்தை ஏன் ஏறிட்டு பார்த்து கொண்டிருக்கவேண்டும்? இயேசு மீண்டும் வருவார் என்பதன் பொருள் இயேசுவின் வல்லமையையும் இயேசுவின் கருத்தையும் கொண்ட அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்பதுதானே பொருள்?

இயேசுவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் ஏற்கனவே தோன்றிவிட்டார். அவரே பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்னும் கிராமத்தில் பிறந்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள்! இவருடைய வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகைபற்றிய தீர்க்க தரிசனம் நிறைவேறிவிட்டது.

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றி, அதாவது மனுஷ குமாரனுடைய வருகையைப்பற்றி சொல்லப்பட்ட அடையாளங்கள் யாவும் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகையின் போது தவறாமல் நிறைவேறிவிட்டன. சில ஆதாரங்களை கீழே காண்போம்.

"அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்த காரப்படும், சந்திரன் ஒளியை கொடாதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் தத்துவங்கள் அசைக்கப்படும்." (மத்தேயு 24:29)

இயேசுவின் இரண்டாவது வருகைக்குரிய காலம் கி.பி 1873-ல் தொடங்குகிறது என்று கிருஸ்தவ வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். தமது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிறைவேறிவிட்டது என்று வாதிடும் வாக்களிக்கப்பட்ட மெசாயா ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு, இறைவனிடமிருந்து (revelation) வெளிப்பாடு கிடைத்தது. இந்த ஆண்டிலேயே என்பது குறிப்பிட தக்கது.

மனித குமாரன் தோன்றும் போது சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியை தராது, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிரும் என்று வேதாகமத்தில் கூறப்பட்டபடி, சூரிய சந்திர கிரகணங்கள் இவ்வுலகே பிரமிக்கத்தக்க அளவில் நடந்தேறின, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன. கி.பி. 1894 ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் வெள்ளிகிழமை அன்று சூரிய கிரகணமும், கி.பி. 1894-ம ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்து ஒன்னாம் நாள் வியாழக்கிழமை அன்று சந்திர கிரகணம் உண்டாயின. வாக்களிக்கப்பட்ட மெசாயா தோன்றும் காலத்திற்கு அடையாளமாக ஒரு ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு தீர்க்க தரிசனத்தின் மூலமாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அதற்கேற்பவே, நாம் மேலே குறிப்பிட்ட சூரிய சந்திர கிரகணங்கள் ஒரு ரமலான் மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தேறின. உலகம் தோன்றிய நாள் முதலாக இப்படிப்பட்ட சூரிய சந்திர கிரகண நிகழ்ச்சிகள். ஒரு மாத காலத்திற்குள் நடைபெற்றதே இல்லை என வானவியல் ஆராட்சியாளர்கள் அத்தாட்சி பகருகின்றனர். வாகளிக்கப்பட்ட மெசாயாவாகிய ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் உண்மையை வலியுறுத்த இறைவன் எத்தகைய பலமிக்க அத்தாட்சிகளை அருளியிருக்கின்றான்.

ஹாம்ஸ்வொர்த் சர்வதேச கலைக்களஞ்சியத்தில் கி.பி. 1872, 1885, 1892 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன என்ற உண்மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெற்றதைப் போன்றே, மனுஷ குமாரன் வரும் காலத்தில் மற்றொரு அடையாளமாகிய நட்சத்திரங்கள் உதிர்வதும் பிசகாமல் நடந்தேறிவிட்டது. உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவற்றைப்போன்ற இவற்றைப் போன்ற அத்தாட்சிகள் எத்தனை எத்தனையோ!

வலுவாய் தொனிக்கும் எக்காளச் சத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தில் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பார்கள். (மத்தேயு 24:31)

ஹஸ்ரத் அஹ்மத் அவர்களுடையா தூதர்கள் உலகத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று பலம் பொருந்திய இஸ்லாத்தின் போதனைகளை பிரச்சாரம் செய்து, இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை நான்கு திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டினார்கள் என்ற உண்மையை உணர்வோர் எவரும் மேற்கண்ட தீர்க்கதரிசனம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடத்தில் முழுமையாக நிறைவேறி விட்டதைகண்டு கொள்வர். இவ்வுலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அஹ்மதியா பிரச்சார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.